search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவி ஏற்றுக்கொண்ட காட்சி
    X
    சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவி ஏற்றுக்கொண்ட காட்சி

    9 மாவட்ட தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவி ஏற்றனர்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 273 ஊராட்சி தலைவர்கள், 1,938 வார்டு உறுப்பினர்கள் உள்பட 2,320 பேர் இன்று பதவி ஏற்றனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

    இதில் 153 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 1,420 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 3,002 கிராம ஊராட்சி தலைவர்கள், 23,185 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தி.மு.க. சார்பில் 139 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 982 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருந்தனர்.

    காங்கிரசில் 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், அ.தி.மு.க.வில் 2 உறுப்பினர்களும், இதர கட்சியினர் 3 பேரும் வெற்றி பெற்று இருந்தனர்.

    இதே போல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க.-212, காங்கிரஸ்-33, பா.ஜனதா-8, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-4, இந்திய கம்யூனிஸ்டு-3, தே.மு.தி.க.-1, இதர கட்சியினர்- 177 பேர் வெற்றி பெற்று இருந்தனர்.

    பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. வினர் வெற்றி பெற்று இருந்தனர்.

    வெற்றி பெற்ற அனைவரும் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு இருந்தன.

    மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்காக வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

    ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர்களாக வெற்றி பெற்றவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் (பி.டி.ஓ. அலுவலகம்) தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்றனர்.

    பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற கூடத்தில் பதவி ஏற்றனர்.

    கவுன்சிலர் ஒருவருக்கு அதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்த காட்சி.


    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 273 ஊராட்சி தலைவர்கள், 1,938 வார்டு உறுப்பினர்கள் உள்பட 2,320 பேர் இன்று பதவி ஏற்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர்கள், 154 ஒன்றிய கவுன்சிலர்கள், 359 ஊராட்சி தலைவர்கள், 2,679 வார்டு உறுப்பினர்கள் என 3,208 பேர் பதவி ஏற்றனர். இவர்களுக்கு அந்தந்த தேர்தல் அதிகாரிகள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    திரிசூலம், பொழிச்சலூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி பங்கேற்று தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதே போல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் எம்.எல்ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டதால் ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகங்களும் இன்று காலை முதலே கோலாகலமாக காணப்பட்டது.

    இதே போல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் திருவிழா போல பதவி ஏற்பு விழா நடந்தது. எங்கு பார்த்தாலும் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

    உறுப்பினர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் புடைசூழ பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். குரூப் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.

    பதவி ஏற்பு விழா இன்று முடிவடைவதால் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.

    இதே போல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகளுக்கும் நாளை மறுநாள் (22-ந்தேதி) மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் அதிக கவுன்சிலர்களின் ஆதரவை பெறுபவர்கள் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.


    Next Story
    ×