search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திருமணம் செய்து கொண்ட மணமக்கள்
    X
    திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திருமணம் செய்து கொண்ட மணமக்கள்

    முகூர்த்த நாள்- மதுரையில் கோவில்கள் முன்பு நடைபெற்ற திருமணங்கள்

    மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள் மூடப்பட்டிருந்தன.
    மதுரை:

    ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளை முன்னிட்டு இன்று ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதிலும் இன்றைய நாளில் பிரதோ‌ஷம், வரலட்சுமி நோன்பு, சுப முகூர்த்த நாள் ஆகியவை ஒரேநாளில் வருவதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதனால் கோவில்களில் திரளானோர் குவிந்தனர்.

    கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்திலுள்ள கோவில்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 22-ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கோவில்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

    மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள் மூடப்பட்டிருந்தன.

    இருப்பினும் இன்று சுப முகூர்த்த நாள் என்பதால் மூடப்பட்டிருந்த கோவில்கள் முன்பு பெண்கள் உள்பட ஏராளமானோர் விளக்கேற்றி வழிபட்டனர்.

    குறிப்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு புதுமண ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோவில் நுழைவு வாயிலில் புதுமண தம்பதிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இருப்பினும் போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தி திருமணம் முடிந்தவுடன் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இன்று காலையில் மட்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு அடுத்தடுத்து திருமணங்கள் நடந்தன.

    திருப்பரங்குன்றம் கோவில் முன்பு குவிந்த பக்தர்கள் கூட்டம்

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

    வரலட்சுமி விரதம், பிரதோ‌ஷத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள சிறிய அம்மன் கோவில்கள் மற்றும் சிவாலயங்களில் பிரதோ‌ஷ வழிபாடுகள் நடந்தன.

    வரலட்சுமி நோன்பை முன்னிட்டு திருமணமான பெண்கள் தாலி பாக்கியம் வேண்டி விரதமிருந்து வீட்டிலேயே வழிபட்டனர். சாலையோரம் மற்றும் தெருக்களில் உள்ள சிறிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு திரளான பெண்கள் குவிந்து வழிபட்டனர்.


    Next Story
    ×