search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நிஷா சுருள்வாள் வீசியதுடன் சிலம்பம் ஆடிய காட்சி.
    X
    திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நிஷா சுருள்வாள் வீசியதுடன் சிலம்பம் ஆடிய காட்சி.

    திருமண ஊர்வலத்தில் சிலம்பம் ஆடி அசத்திய மணப்பெண்

    திருமண விழாவில் நான் கற்ற நமது மதிப்புமிக்க கலைகளை ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மணப்பெண் நிஷா கூறினார்.
    தூத்துக்குடி:

    சமீப காலமாக திருமணம் போன்ற சுபகாரியங்களில் ஆடல்-பாடல் என்று கொண்டாட்டம் களை கட்டுகிறது. திருமண விழாவில் மணமக்கள் உற்சாக நடனம், உறவினர்களுடன் குழு நடனம் என்று அசத்தல் அரங்கேறுகிறது.

    இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் கவருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் திருமணக்கோலத்தில் பாரம்பரிய கலைகளை ஆடி அனைவரின் கைதட்டலையும் பெற்று இருக்கும் ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி மாவட்டம் நடுக்கூடுடன்காடு கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் நிஷா. பி.காம். பட்டதாரியான இவருக்கும், தேமாங்குளத்தை சேர்ந்த ராஜகுமாருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் தேமாங்குளத்தில் திருமண ஊர்வலம் நடந்தது.

    அப்போது மணப்பெண் நிஷா பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார். அவர் தனது இரு கைகளிலும் சிலம்பத்தை பிடித்து லாவகமாக சுழற்றியபோது, அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சுருள்வாள் வீசியபோது அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். திருமணக்கோலத்தில் மணப்பெண் செய்த இந்த சாகசங்கள் அனைத்தும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    இதுகுறித்து மணப்பெண் நிஷா கூறுகையில், ‘எனக்கு சிறு வயதிலேயே சிலம்பம் கற்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. எனது தாயார் மணியும், பெண்கள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்கம் அளித்தார். அதனால் நான் சிலம்பம், ஒயிலாட்டம், சுருள்வாள், களரி ஆகிய கலைகளை கற்றுள்ளேன். மாஸ்டர் மாரியப்பனிடம் பயிற்சி பெற்றேன். இந்த பாரம்பரிய கலைப்போட்டிகளில் நான் பல்வேறு பரிசுகளும் பெற்று உள்ளேன். திருமண விழாவில் நான் கற்ற நமது மதிப்புமிக்க கலைகளை ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
    Next Story
    ×