search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிமுன் அன்சாரி
    X
    தமிமுன் அன்சாரி

    தேர்தல் கூட்டணி குறித்து 25-ந் தேதி முடிவு- தமிமுன் அன்சாரி பேட்டி

    தேர்தல் கூட்டணி குறித்து 25-ந் தேதி முடிவு எடுக்கப்படும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.
    கும்பகோணம்:

    மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இந்த கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சி முழுவதுமாக ஆதரிக்கிறது. சமீபகாலமாக பெட்ரோல்-டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

    சாமானிய மக்களின் மீது மத்திய அரசு பொருளாதார யுத்தத்தை மேற்கொண்டிருப்பதாக கருதுகிறோம்.‌ ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 என்ற அளவில் உயர்ந்து இருப்பது மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சாமானியர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியாவில் இறக்குமதி செய்து இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு ரூ.33 என நிர்ணயம் செய்துள்ள நிலையில் உள் நாட்டு மக்களிடம் 217 சதவீதம் என்ற அளவுக்கு ஏன் வரி விதிக்க வேண்டும்? மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்து பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஏற்கனவே நாங்கள் வெளியேறி விட்ட நிலையில் மீண்டும் அந்த கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×