search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம்- புரோக்கர்கள் 4 பேர் கைது

    திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்த புரோக்கர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    கொரோனா தாக்கம் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் செலவுக்காக கொண்டு வரும் வெளிநாட்டு பணத்தை, திருச்சி விமான நிலையத்திற்கு வந்ததும் அதனை இந்திய பணமாக மாற்றி கொள்வதற்கு பண பரிமாற்று மையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பயணிகள் பணத்தை மாற்றினால் அதற்கான வரி செலுத்த வேண்டும். எனவே வரி செலுத்தாமல் இருக்கும் வகையில், சட்டவிரோதமாக விமான நிலைய வளாகத்தில் வைத்து புரோக்கர்கள் சிலர் பணத்தை பரிமாற்றம் செய்து கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்தது.

    இது குறித்து திருச்சி விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிறப்பு காவல் படையினர் இன்று காலை திருச்சி விமான நிலைய வளாகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளிடம் ஒரு கும்பல் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்று அதனை இந்திய ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர்கள் ரவி, பிரசாத், ரபீக் மற்றும் ஒருவர் ஆகிய 4பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×