search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    பரமக்குடியில் இன்று சுற்றுப்பயணம்- மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

    பரமக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
    பரமக்குடி:

    சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    புகார் பெட்டியில் அளிக்கப்படும் இந்த மனுக்களுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தனி அமைச்சகம் மூலம் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று பிற்பகல் தொடங்குகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு இன்று வருகை தரும் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் மனுக்களாக பெறுகிறார். மேலும் பொதுமக்கள் மத்தியில் அவர் சிறப்புரையாற்றுகிறார்.

    கைத்தறி நெசவாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள், செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சிக்காக பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடி வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர்.

    மு.க.ஸ்டாலினை வரவேற்று நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் உருவம் பதித்த ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.

    பரமக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் காரில் பரமக்குடி புறப்பட்டுச் சென்றார்.

    Next Story
    ×