search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு
    X
    ஜல்லிக்கட்டு

    பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை ஆவேசமாக அடக்கிய வீரர்கள்

    பல்லவராயன்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டி ஏழைகாத்தஅம்மன் வல்லடிகார கோவில் திருவிழாவையொட்டி வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதற்காக 600 காளைகள் தேர்வு செய்யப்பட்டது. மருத்துவச்சான்றிதழ் மற்றும் டோக்கன் உள்ள காளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதேபோல் மாடுபிடிவீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் உடல்தகுதி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. இதில் 400 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சீருடைகளில் களமிறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்தேஜஸ்வி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதல் காளையாக கோவில் காளை வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டது.

    இதனை மாடுபிடி வீரர்கள் அடக்கமாட்டார்கள். இதனைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பீரோ, கட்டில், அண்டா, வெள்ளிபாத்திரங்கள், தங்ககாசுகள் பரிசுகளாக கொடுக்கப்பட்டன. பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு ஜல்லிக்கட்டு முழுவதும் பதிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×