search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேஜஸ் ரெயில்
    X
    தேஜஸ் ரெயில்

    மதுரை-சென்னை இடையே தேஜஸ் ரெயில் 10-ந் தேதி முதல் மீண்டும் இயக்கம்

    மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல், தாம்பரத்தில் நின்று செல்ல வாய்ப்புள்ளது.
    மதுரை:

    மதுரையில் இருந்து சென்னைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிநவீன தேஜஸ் சொகுசு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றது. இந்த 2 ரெயில் நிலையங்களிலும் பிளாட்பாரத்தில் கடைகள் இல்லை.

    ரெயிலுக்கு உள்ளேயும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுவதில்லை. இதனால், பயணிகள் இந்த ரெயிலில் செல்வதை தவிர்த்தனர். அதையடுத்து, பயணிகள் வரத்து குறைவாக இருப்பதாக கூறி தேஜஸ் ரெயில் கடந்த 4-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    அதனை தொடர்ந்து, மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம், தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதியது. அதில், மதுரை-சென்னை சொகுசு தேஜஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தியது.

    இந்த நிலையில், வருகிற 10-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சென்னைக்கு தேஜஸ் ரெயில் இருமார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.

    அதன்படி, சென்னையில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.02613) காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து (வ.எண்.02614) மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். ரெயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் பொதுமக்களின் பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    இது குறித்து கோட்ட மேலாளர் லெனின் கூறியதாவது:-

    மதுரை தேஜஸ் ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இயக்கப்படவுள்ளது. இந்த ரெயிலை கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரையில் இருந்து செல்லும் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லவும் பொதுமேலாளரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெயிலில் அதிக பயணிகள் சென்றால் ரெயில்வேக்கு வருமானம் அதிகரிக்கும். எனவே, பயணிகளுக்கான தேவைகளை நிறைவு செய்வதையே முதல் குறிக்கோளாக கொண்டு கோட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேஜஸ் ரெயில் இயக்கம் குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் கூறும்போது, “பயணிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தென்னக ரெயில்வே மதுரை-சென்னை தேஜஸ் ரெயிலை இயக்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக ரெயில்வே மந்திரி, பொதுமேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி” என்றார்.
    Next Story
    ×