search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர்
    X
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ திட்டம்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலத்காரம் செய்து, வீடியோ எடுத்து பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது.

    இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு, சிவீல் என்ஜினீயர் சபரிராஜன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சமயத்தில் இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டு லேப்-டாப், செல்போனை கைப்பற்றி விசாரித்தனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே பொள்ளாச்சியில் முகாமிட்டு இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கண்காணித்தனர். முதற்கட்டமாக அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் உள்பட 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மகிளா கோர்ட்டில் நீதிபதி நந்தினிதேவி முன்பு ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோபி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376 டி(கூட்டு பலாத்காரம்), 354 (பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை) 392 பொருட்களை களவாடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பாலியல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சபரிராஜனுடன் சேர்ந்து அருளானந்தம், அவரது நண்பர்கள் பைக் பாபு, ஹெரன் பால் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பெண்களை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்து அந்த பெண்களை மிரட்டி வந்துள்ளனர்.

    உயிருக்கு பயந்து போன பெண்கள் அதனை வெளியில் கூறவில்லை. இதற்கிடையே வெளியான வீடியோவில் 2 பெண்களின் முகம் தெரியவே சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அருளானந்தம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    கைதான அருளானந்தம் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுத்தாக்கலும் செய்ய உள்ளனர். அப்படி காவலில் எடுத்து விசாரிக்கும்போது இன்னும் பலர் இந்த வழக்கில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து பொள்ளாச்சியிலேயே முகாமிட்டுள்ளனர். அங்கு அருளானந்தம் உள்பட 3 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள் யார்? என்ற பட்டியலை சேகரித்து அவர்களையும் விசாரணை வளையத்துக்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×