search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனையில் ஈடுபட்ட போலீசார்
    X
    சோதனையில் ஈடுபட்ட போலீசார்

    பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவையில் விடிய,விடிய போலீசார் வாகன சோதனை

    பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    கோவை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாநகரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். போலீசார் முக்கிய கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர்.

    மாநகரில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய போலீசார் ரோந்து சென்று வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர எல்லையில் உள்ள 12 சோதனை சாவடிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே நகருக்குள் அனுமதித்தனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர்.

    மேலும் ரெயில் நிலையம் வழியாக செல்லும் ரெயில்களில் போலீசார் ஏறி மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். வெளியூர்களுக்கு செல்லும் பார்சல்கள் மற்றும் வந்து இறங்கும் பார்சல்களை போலீசார் சோதனை செய்தனர்.

    விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

    கோவை புறநகர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். அவர்கள் பதட்டமான பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லையில் உள்ள 14 சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்த பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதித்தனர்.
    Next Story
    ×