search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படாது- அமைச்சர் தங்கமணி

    தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியின் போது கட்டிட சாரம் இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடங்களின் கட்டுமான பணிகள் குறித்தும், கட்டிட சாரம் இடிந்து விழுந்ததாக கூறப்பட்டதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று (நேற்று) காலை 6 மணி அளவில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கான்கிரீட் போட்டுக் கொண்டிருந்தபோது முட்டு அடைக்கப்பட்டிருந்த கம்பியில் வெல்டிங் விட்டுவிட்ட காரணத்தால் அதிகாரிகள் உடனடியாக அதை கண்டுபிடித்து நிறுத்தி விட்டனர். பின்னர் அவர்களாகவே ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் அதை இடித்துவிட்டனர். அரசு கட்டிடங்கள் தரமாக கட்டப்படுகிறதா? என்பதை கண்காணிப்பது அதிகாரிகளின் பணியாகும். விபத்து என தகவல் வெளியானது போல் ஆஸ்பத்திரி கட்டிடம் இடிந்து விழவும் இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவும் இல்லை.

    தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்படாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, அரசியலுக்காக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் அரசு கட்டிடங்கள் தரமாக இல்லை என கூறுகிறார்.

    பொள்ளாச்சியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இழப்பீட்டுத் தொகையை வழங்கி விட்டு மீதமுள்ள பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கூறி உள்ளனர். அதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மழைக்காலம் என்பதால் பாதுகாப்புக்காகவே மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுகிறது. மழை நின்றவுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு மின்சாரம் வழங்கப்படும். மின்சார தடை என்பது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×