search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடமான்குளம் வனப்பகுதியில் வீசப்பட்ட கள்ளத்துப்பாக்கிகளை படத்தில் காணலாம்.
    X
    கடமான்குளம் வனப்பகுதியில் வீசப்பட்ட கள்ளத்துப்பாக்கிகளை படத்தில் காணலாம்.

    வனப்பகுதியில் வீசப்பட்ட 28 கள்ளத் துப்பாக்கிகள்- போலீசார் கைப்பற்றி விசாரணை

    கடமான்குளம் வனப்பகுதியில் வீசப்பட்ட 28 கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்தனர். மேலும் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை போலீசில் ஒப்படைக்காமல் ஓடை மற்றும் வனப்பகுதியில் வீசி சென்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சாணார்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் தவசிமடை பகுதியில் உள்ள கருந்தண்ணி ஓடை பகுதியில் வீசிச் சென்ற 14 கள்ளத்துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். இதேபோல் தவசிமடை பகுதியில் சிறுமலை ஓடையில் வீசிச் சென்ற 10 கள்ளத்துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையில் தாலுகா போலீசார் சிறுமலை பகுதிகளில் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்களை கண்டறிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருந்த சிறுமலை புதூரை சேர்ந்த ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி, வனச்சரகர் மனோஜ் மற்றும் போலீசார் சிறுமலை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது சிறுமலை அருகே கடமான்குளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் வசந்த் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த 28 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் 4 துப்பாக்கி குழல்களை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் வீசியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×