search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல் நீரானது பச்சை நிறமாக காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.
    X
    கடல் நீரானது பச்சை நிறமாக காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

    மண்டபம் பகுதியில் திடீரென பச்சை நிறமாக மாறிய கடல்நீர்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடல்நீர் திடீரென பச்சை நிறமாகியது. இதனை மீனவர்கள், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
    ராமநாதபுரம் :

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு துறைமுக கடல் பகுதியில் இருந்து மரைக்காயர்பட்டினம், வேதாளை வரையிலான பகுதியில் கடல் நீரானது நேற்று திடீரென பச்சை நிறமாக மாறி இருந்தது. இதனை மீனவர்கள், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

    இது போல் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் தலைமையிலான விஞ்ஞானிகள் பார்வையிட்டதுடன் ஆய்வுக்காக கடல் நீரையும் சேகரித்துச் சென்றனர்.

    இதுபற்றி விஞ்ஞானி ஜெயகுமார் அளித்த விளக்கம் வருமாறு:-

    ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை தென் கடல் பகுதியில் வீசும் காற்று சீசனின் போது, குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் கடலில் உள்ள நாட்டிலூக்கா என்ற பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பச்சை பாசி இனம், தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படர்ந்து விடும். இந்த சமயத்தில் கடலானது பச்சை நிறமாக மாறிவிடும்.

    கடல் அலை வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதுபோன்று கடல்நீரானது பச்சை நிறமாக மாறுவது கண்ணுக்கு தெரியாது. கடல் அலை அதிக வேகமின்றி காணப்பட்டால் பச்சை பாசி படர்ந்து இருப்பது போன்று கடல்நீர் மாறிவிடும்.

    மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து வேதாளை வரையிலான கடல் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் நீரானது பச்சை நிறமாக காட்சி அளித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 10 நாள் பாம்பனில் இருந்து மண்டபம், வேதாளை வரையிலான கடல் பகுதியில் பச்சைப்பாசி படர்ந்து இருந்தது. அது போல் இந்த ஆண்டும் பச்சைப் பாசி அதிகளவில் படர்ந்து உள்ளது. இதுபோன்று பாசி படரும் போது கரையோரம் உள்ள மீன்கள் சுவாசிக்க முடியாமல் அதன் செவுள்கள் அடைக்கப்பட்டு இறந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு இதுவரையிலும் கரையோரம் உள்ள பகுதியில் மீன்கள் ஏதும் இறந்து கரை ஒதுங்க வில்லை. ஆனால் கடலானது தொடர்ந்து இதே பச்சை நிறமாக இருக்கும் பட்சத்தில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×