search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்ஸ்
    X
    ஆம்புலன்ஸ்

    மதுரைக்கு கூடுதலாக 5 புதிய ஆம்புலன்சுகள்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

    மதுரை மாவட்டத்திற்கு புதிதாக 5 ஆம்புலன்சுகள் வந்துள்ளது. இவைகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மதுரை:

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஆம்புலன்சுகளின் தேவையும் முக்கியமானதாக மாறி இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இயங்கி வந்த ஆம்புலன்சுகளில் பெரும்பாலானவை கொரோனா நோயாளிகளை அழைத்து வர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஆம்புலன்சுகளின் தேவை அதிகரித்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் புதிய ஆம்புலன்சுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இதில் மதுரைக்கு ஆம்புலன்சுகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையே, மதுரைக்கு மேலும் புதிதாக ஆம்புலன்சுகள் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து தற்போது மதுரைக்கு புதிதாக 5 ஆம்புலன்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்டத்தில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்களுக்கு பயன்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் ஏற்கனவே 30 ஆம்புலன்சுகள், 2 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுகளும் உள்ளன. இவை அனைத்தும் மாவட்டம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு ஆம்புலன்சில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வரை, வேறு ஆம்புலன்சுகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் புதிதாக 5 ஆம்புலன்சுகள் மதுரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவைகள் நேற்று மதுரைக்கு வந்தது. அவற்றில் மருத்துவ கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அதற்கான பணியாட்களை நியமிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அந்த 5 ஆம்புலன்சுகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    அதுபோல், காவல்துறை மூலம் அதிக விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடத்தில் புதிய ஆம்புலன்சுகளை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். அதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்புலன்சுகளுக்கான தொடக்க விழா நிகழ்ச்சியும் விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இதுதவிர அடுத்த மாதமும் கூடுதலாக ஆம்புலன்சுகள் மதுரைக்கு வர இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×