search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கொரோனா அச்சத்தில் பெண் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

    கொரோனா தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில், ஸ்ரீரங்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.
    ஸ்ரீரங்கம்:

    திருச்சி ஸ்ரீரங்கம் நேதாஜிரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தனபால். பாய்லர்ஆலை ஊழியர். இவருடைய மனைவி புவனேஸ்வரி(வயது 54). இவரது மகன் பத்மநாபன்.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை தனபால் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று பகல் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை வேலை முடிந்து அவரது கணவர் தனபால் வீடு திரும்பினார். வீட்டின் கதவை நீண்டநேரமாக தட்டிப்பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்தார். உடனே தன்னிடம் இருந்த மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டினுள் புவனேஸ்வரி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, புவனேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீட்டில் கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில், கடந்த ஒருமாதமாக கொரோனாவால் அதிகமானோர் உயிரிழப்பதாக வரும் தகவல்கள் என்னை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒருவேளை எனக்கும் கொரோனா வந்துவிடுமோ? என்ற பயம் வந்துவிட்டது. இந்த பயத்துடன் என்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை. ஆகவே எனது உயிரை விடுவதாக முடிவு செய்து, தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்த சில மாதங்களாகவே புவனேஸ்வரி மிகவும் கவனத்துடன் இருந்து வந்துள்ளார். காய்கறிகளை மிகவும் சுத்தமாக தான் பயன்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை கேட்டு வந்த மனஅழுத்தத்தால் இந்த முடிவை எடுத்துள்ளார்” என்றனர்.

    இதைத்தொடர்ந்து புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×