search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி தற்கொலை"

    திருச்சி அருகே திருமணமான 2 மாதத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் மகள் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    திருச்சி நவல்பட்டு அருகே உள்ள பூலாங்குடியிருப்பு இந்திராநகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ராணி. அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார். இவர்களது மகள் நந்தினி (வயது 24). இவருக்கும் திருச்சி வாழவந்தான்கோட்டை செட்டியார்பேட்டையை சேர்ந்த பாலசந்தர் என்பவருக்கும் கடந்த 29-8-2018 அன்று திருமணம் நடைபெற்றது. பாலசந்தர் சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    திருமணமானதும், சென்னையில் கணவருடன் வசித்து வந்த நந்தினி கர்ப்பமடைந்தார். இதையடுத்து திருச்சி பூலாங்குடியிருப்பில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து நந்தினியின் பெற்றோர் நவல்பட்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த சில நாட்களாக நந்தினி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதமே ஆவதால் திருவெறும்பூர் உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனிடையே நந்தினி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இன்று புதிய தமிழகம் கட்சி செயலாளர் ரஞ்சித்குமார், அருள்ஜோதி மற்றும் த.ம.மு.க. ராஜேந்திரன் மற்றும் நந்தினியின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ×