search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்வாய் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.
    X
    கால்வாய் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாசன கால்வாய், ஏரிகள் தூர்வாரும் பணி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாசன கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேரில் ஆய்வு செய்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கட்டு பாசன கால்வாய், பர்கூர் சின்னமட்டாரப்பள்ளி ஏரி, ரங்கப்பன்நாயக்கன் ஏரிகளில் பொதுப்பணித்துறை சார்பாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.

    இந்த பணிகளை பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை சார்பாக ஏரிகள், நீர்வரத்து கால்வாய்கள், அணைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கெலவரப்பள்ளி அணையில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பில் இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும், பர்கூர் தாலுகா சின்னமட்டாரபள்ளி ஏரி ரூ.30 லட்சம் மதிப்பிலும், ரங்கப்பன்நாய்க்கன் ஏரி ரூ.40 லட்சம் மதிப்பிலும், நாராயணப்பன் ஏரி ரூ.57.50 லட்சம் மதிப்பிலும், அரசம்பட்டி ஆற்றுக்கால்வாய் ரூ.84.75 லட்சம் மதிப்பிலும், கடவரஅள்ளி அணையின் கால்வாய் ரூ.55 லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,169 ஹெக்டேர் பாசன பரப்பு பயன் பெறும். இந்த பணிகள் விவசாயிகளின் மூலம் 10 சதவிகித நிதியும், 90 சதவிகிதம் அரசின் பங்களிப்பாக வழங்கப்படும். இந்த குடிமராமத்து திட்ட பணிகளில் ஓசூர் தாலுகாவில் கெலவரப்பள்ளி அணை இடது மற்றும் வலதுபுற கால்வாயில் முட்புதர்கள் அகற்றி கால்வாயின் உள்பகுதியில் படிந்துள்ள மண்ணை தூர் வாரும் பணிகள், அரிப்பு ஏற்பட்டுள்ள பாதையில் மண் கொட்டி கரைகளை சரி செய்தல், கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கால்வாய் சீரமைத்தல் ஏரி தூர்வாரும் பணிகள், மதகுகள் சீரமைக்கும் பணிகள் முடித்து மழைநீரை சேமிக்க பாசன விவசாயிகளும், பொதுப்பணித்துறை அலுவலர்களும், முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் (பெண்ணையாறு வடிநிலம்) சுரேஷ், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், கீதாலட்சுமி, ராதிகா, கார்த்திக், பாசன சங்க தலைவர்கள் ராஜப்பா, சத்தியநாராயணா, ரமேஷ், முனிராஜ், மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×