search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மட்டம் 100.01 அடியாக இருந்த நிலையில் மேட்டூர் அணையின் தோற்றம்.
    X
    நீர்மட்டம் 100.01 அடியாக இருந்த நிலையில் மேட்டூர் அணையின் தோற்றம்.

    பரவலாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    பரவலாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    மேட்டூர் :

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    குடிநீரின் தேவைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைத்தும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 14-ந் தேதி வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன்படி 15-ந் தேதி வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்து இருந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 686 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 100.02 அடியாக இருந்தது.

    மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. 10.30 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இதன் காரணமாக நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்படி வினாடிக்கு 1,018 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. இதன்படி வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 100.01 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×