search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    பொதுமக்களுக்கு சிரமமின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ

    மதுரையில் பொதுமக்களுக்கு சிரமமின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொது விநியோக திட்டம் தொடர்பான திறனாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் வினய் முன்னிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குறிப்பாக நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் விடுமுறையின்றி இந்த கொரேனா பாதிப்பு காலத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு அரிசி உள்பட அனைத்து குடிமை பொருட்களையும் பெற்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர். நியாயவிலைக்கடைகளின் மூலம் தரமான பொருட்கள் வழங்கப்படுவதால் மக்கள் ஆர்வமுடன் அத்தியாவசிய பொருட்களை வாங்குகின்றனர்.

    மதுரை மாவட்டத்தைச் பொறுத்தளவில் கூட்டுறவுத்துறை சார்பில் 7 நகர்வு வாகனங்கள் மூலமாக ஒவ்வொரு வாகனமும் 30 கட்டுப்பாட்டு பகுதிகளை உள்ளடக்கி ரூ.6.61 லட்சத்திற்கு அனைத்து வகையான காய்கறிகளையும், ரூ.24.97 லட்சத்திற்கு மளிகை பொருட்களையும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது.

    மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் அத்தியா வசிய பொருட்களை கூடுதலாக பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

    கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாட்களை கடந்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி குடிமை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், மதுரை பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணையத்தலைவர் வில்லாபுரம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×