search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? பழனிசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை கூடி முடிவு

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? சில மாவட்டங்களில் தளர்வுகள் அனுமதிக்கப்படுமா? என்பதுபற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை கூடி முடிவு எடுக்கிறது.
    சென்னை:

    இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவிடாதபடி நாடெங்கும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் 14-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் கடந்த 11-ந்தேதி தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், மே 3-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27-ந்தேதி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அவர் கேட்டறிந்தார். சில மாநிலங்கள், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் மே 2-ந்தேதியன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. மே 3-ந்தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதற்கு முந்தைய நாள் அமைச்சரவையை முதல்-அமைச்சர் கூட்டியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    மே 3-ந்தேதிக்கு பிறகான ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இதில் சில இனங்களில் மாநிலங்களே முடிவெடுக்க அனுமதிக்கலாமா? என்பது பற்றிய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு முடிவெடுக்கும் என்று தெரிகிறது. இதற்காக அமைச்சரவை மே 2-ந்தேதி கூட்டப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்குமா? தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தலாமா? என்பது போன்றவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×