search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஷா நிறுவனர் சத்குரு
    X
    ஈஷா நிறுவனர் சத்குரு

    ஈஷாவில் நாளை முதல் 3 நாட்கள் ‘யக்‌ஷா’ கலைத் திருவிழா

    ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாரத கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக இசை, பாட்டு மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் கூடிய ‘யக்‌ஷா’ கலைத் திருவிழா நடைபெற உள்ளது.
    கோவை:

    ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மகாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈஷாவின் 26-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி, மகாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் நடக்கும் ‘யக்‌ஷா’ திருவிழாவில் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களுக்கு கலை விருந்து படைக்க உள்ளனர். கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தவும், தேர்ந்த கலை ரசிகர்கள் பாரம்பரிய கலைகளை கண்டு களிப்பதற்கும் இது ஒரு சிறந்த மேடையாக விளங்குகிறது. 

    நாளை (18-ம் தேதி) கலா ராம்நாத்தின் இந்துஸ்தானி வயலின் இசை நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஐதராபாத் சசோதரர்கள் என அழைக்கப்படும் சேஷாச்சாரி மற்றும் ராகவாச்சாரியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், 20-ம் தேதி ஷர்மிளா பிஸ்வாஸின் பாரம்பரிய ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் சூர்ய குண்ட மண்டபம் முன்பாக தினமும் மாலை 6.50 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம். மேலும், பாரம்பரிய துணி ரகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    21-ம் தேதி மகாசிவராத்திரியன்று வருகை தரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×