search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மனைவி, மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தஞ்சை நகைக்கடை அதிபரும் உயிரிழப்பு

    கடன் தொல்லையால் மனைவி, மகன்களை கழுத்தை அறுத்துக் கொன்ற தஞ்சை நகைக்கடை அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). அங்கு நகைக்கடை நடத்தி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்வராஜ் தனது மனைவி செல்லம், மகன்கள் நிகில் (20), முகில் (18) ஆகியோருடன் திருச்சிக்கு வந்தார். திருச்சி சிங்காரத்தோப்பு அருகில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

    அப்போது அவரது மனைவி மற்றும் மகன்களுடன் அவர் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இந்த சம்பவத்தில் செல்வராஜ் மனைவி செல்லம் மற்றும் மகன்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு  போராடிய செல்வராஜை  போலீசார் காப்பாற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவேல் விசாரணை நடத்தினார். நகைக்கடை நடத்தி வந்த செல்வராஜ் கடன் பிரச்சனையால் வட்டி கட்டமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரது மூத்த மகன் நிகில் மூளைவளர்ச்சி இன்மையால், மனவளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தார். 20 வயதான நிலையில் மன வளர்ச்சி இல்லாத மகன் படும் வேதனை, கடன் பிரச்சனை என அவதிப்பட்டு வந்த செல்வராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்ய திருச்சி விடுதியில் அறை எடுத்து தங்கியது தெரியவந்தது. மனைவி, மகன்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கழுத்தை அறுத்து உள்ளார். பிறகு தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டார். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட செல்வராஜ் ஆஸ்பத்திரியில் நேற்று இரவு இறந்தார். 

    கடன் பிரச்சனையில் ஒரு குடும்பமே கொடூரமான முறையில் இறந்துள்ளது. இந்த சம்பவம் திருச்சி மற்றும் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×