search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குமரி மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

    குமரி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குழந்தைகளை தாக்கும் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை உலகில் இருந்து முற்றிலுமாக ஒழித்து போலியோ இல்லாத பொன்னுலகம் படைத்திட 1995-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. 1997-ம் ஆண்டிற்கு பிறகு குமரி மாவட்டத்தில் போலி யோவால் பாதித்த குழந்தைகள் கண்டறியப்படவில்லை.

    இந்தியாவில் ஜனவரி 2011 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படாததால் 27.03.2014 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடாக சான்றளிக்கப்பட்டது.கடந்த ஜூன் 2016-ம் ஆண்டு முதல் வாய் வழியாக மட்டும் அல்லாமல் ஊசி மூலமாகவும் போலியோ மருந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு இச்சிறப்பு முகாம் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. முகாமில் 1,52,422 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

    அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1236 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி பணியில் உள்ள 4944 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான சொட்டு மருந்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியில் உரிய குளிர்பதன முறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

    மக்கள் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையம், பூம்புகார் படகுத்துறை, காந்தி மண்டபம் ஆகிய இடங்களில் 20 முகாம்களும் உரிய பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் 14-ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகாம் ஆய்வுப்பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கும் பணியாளர்களுக்கு (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சத்துணவு, அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள்) பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்துதுறை, நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×