search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான வங்கதேச வாலிபர்கள் கமால் கான், ரகாத்கான்
    X
    கைதான வங்கதேச வாலிபர்கள் கமால் கான், ரகாத்கான்

    போலி ஆவணங்களுடன் தங்கி இருந்த 2 வங்கதேச வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு

    காங்கயத்தில் போலி ஆவணங்களுடன் தங்கி இருந்த 2 வங்கதேச வாலிபர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பனியன் நிறுவனம் மற்றும் விசைத்தறி கூடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    அவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் பாஸ்போர்ட் இல்லாமல் முறைகேடாக வேலை பார்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பனியன் கம்பெனி உரிமையாளர்களுக்கு தங்கள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு போலீசார் கூறினர்.

    இதற்கிடையில் கடந்த சில மாதத்திற்கு முன் பனியன் மற்றும் விசைத்தறி கூடங்களில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வேலை பார்த்ததாக வங்கதேசம் மற்றும் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தொழிலாளர்கள் என்ற போர்வையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று படியூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கமால் கான்(வயது 27), ரகாத்கான்(27) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த ஆதார்கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    அப்போது அது போலியானது என்பதும், அவர்கள் 2 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் வந்து தங்கி உள்ளனர்.

    பின்னர் அங்குள்ள முகவரியை கொடுத்து போலியாக பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து காங்கயம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×