search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகம் முழுவதும் பதுக்கல்- ரூ.4 கோடி ரே‌ஷன் அரிசி பறிமுதல்

    தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் வரையில் 14 ஆயிரத்து 167 குவிண்டால் அளவுக்கு கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 98 லட்சத்து 8 ஆயிரத்து 736 ஆகும்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ரே‌ஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி, மண் எண்ணை உள்ளிட்ட பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்களை பிடிக்க சிவில்சப்ளை, சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    சிவில்சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி. பிரதீப் வ.பிலிப், ரே‌ஷன் பொருட்களை கடத்தி பதுக்கி விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் சிவில்சப்ளை சி.ஐ.டி. போலீசார் அவ்வப்போது அதிரடி வேட்டையில் ஈடுபட்டு ரே‌ஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் ரே‌ஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 5 ஆயிரத்து 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 167 குவிண்டால் அளவுக்கு அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 98 லட்சத்து 8 ஆயிரத்து 736 ஆகும்.

    ரே‌ஷன் மண்எண்ணையை பதுக்கி விற்பனை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 311 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 11 ஆயிரம் லிட்டர் மண்எண்ணையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ரே‌ஷன் பொருட்களை பதுக்கி விற்பனை செய்து கைது செய்யப்பட்டவர்களில் 112 பேரிடம் உறுதிமொழி பத்திரத்தையும் எழுதி வாங்கியுள்ளனர்.

    அதில் ஒன்று அல்லது 2 ஆண்டுகள் வரையில் எந்த தவறும் செய்ய மாட்டேன் என எழுதி கொடுத்தவர்களில் 2 பேர் அதனை மீறி செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ரே‌ஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 5579 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ரூ.72½ லட்சம் மதிப்பிலான 12 ஆயிரத்து 833 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×