search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் - கைது செய்யப்பட்ட ரவுடி சம்பத்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் - கைது செய்யப்பட்ட ரவுடி சம்பத்

    புதுவையில் கள்ள நோட்டு புழக்கம் - வேலூர் ரவுடி கைது

    புதுவையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட வேலூர் ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வேலூர் மாவட்டம் ஏலகிரியை அடுத்த ஜோலார் பேட்டையை சேர்ந்தவர் அருட்செல்வம். தொழில் அதிபரான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.50 லட்சம் கேட்டு ஒரு கும்பல் கடத்தியது.

    பின்னர் தொழில் அதிபர் அருட்செல்வத்தை ஏலகிரி போலீசார் மீட்டனர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரவி என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த கடத்தல் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ரவுடியான ஆட்டோ டிரைவர் சம்பத் (வயது 40) என்பவர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சம்பத்தை ஏலகிரி தனிப்படை போலீசார் தேடி வந்தனர். சம்பத் பயன்படுத்தி வந்த செல்போன் டவரை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் புதுவை அருகே தமிழக பகுதியான இரும்பை சிவன் கோவில் அருகே ஒரு சிற்பக்கூடத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ஏலகிரி தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உதவியுடன் சிற்பக்கூடத்தில் பதுங்கி இருந்த சம்பத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    சிற்பக்கூடத்தில் உரிமையாளரான சஞ்சீவி நகரை சேர்ந்த சேகர் ஏலகிரிக்கு சுற்றுலா செல்லும் போது ஆட்டோ டிரைவர் சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பழக்கத்தில் சேகரின் சிற்பக்கூடத்தில் சம்பத் தஞ்சம் அடைந்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் சோதனை நடத்திய போது ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் ஏராளமானவை இருந்தது. மொத்தம் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கள்ள நோட்டுகள் இருந்தன.

    இந்த கள்ள நோட்டுகளை சம்பத் புதுவை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    இதையடுத்து அவரிடம் இருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கள்ள நோட்டுகளை சம்பத் எங்கிருந்து பெற்றார் என்பது குறித்தும், அவர் எங்கெல்லாம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×