search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
    X
    வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

    தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு

    தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் முடிவை செயல்படுத்த தொடங்கியது.

    வங்கிகள் இணைப்பு முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.

    அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மத்திய அரசு அதிகாரிகளுடன் வங்கி ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து திட்டமிட்டப்படி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

    தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதித்துள்ளது.

    காசோலை பரிமாற்றம், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பண பரிமாற்றம் அனைத்தும் முடங்கியது. அரசு கருவூல சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் வங்கி அதிகாரிகள் பணிக்கு சென்றனர்.

    அவர்கள் வங்கிகளை திறந்து வைத்து இருந்த போதிலும் வங்கியின் இயல்பான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஏ.டி.எம். சேவையும் ஒருசில இடங்களில் முடங்கின. பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    வங்கி

    தீபாவளி பண்டிகை நேரத்தில் வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் நடப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்களின் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதித்தது.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு திரண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கி இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். வங்கிகளை இணைத்து கிளைகளை மூடக்கூடாது, வாராக்கடன் பணத்தை வசூலிக்க வேண்டும், வாராக்கடன் சுமைகளை சாமான்ய மக்கள் மீது சுமத்தக்கூடாது.

    ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டுள்ன. காசோலை பரிவர்த்தனை முடங்கி உள்ளது. பணம் எடுத்தல், போடுதல் போன்ற அன்றாட இயல்பான பணி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு திட்டத்தை கைவிடவில்லை என்றால் மேலும் அடுத்த கட்ட போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். தமிழகத்தில் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

    அனைத்து மாவட்டங்களிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் முழுமையாக நடந்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யூ., எல்.பி.எப். போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. வங்கி அதிகாரிகளும் சகோதர ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×