search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க புதிய கமிட்டி அமைப்பு

    சென்னையில் உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து மறு ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 2 மாதத்தில் அரசுக்கு அறிக்கை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி கடந்த வருடம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சொத்துக்களின் வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும், ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு அதிகமாகவும் கணக்கிட்டு சொத்து வரி விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்து இருந்தது.

    ஆனால் மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளுக்கும் சென்னை நகரின் பழைய வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் சொத்து வரி பலமடங்கு வித்தியாசம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    ஒரு சில இடங்களுக்கு 150 சதவீதத்திற்குமேல் வரி விதித்து இருப்பதாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு அபார்ட்மென்டில் உள்ள ஒரே அளவிலான வீடுகளுக்கு வெவ்வேறு விதமாக சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகரில் உள்ள ராமனியம் காமதேனு அபார்ட்மென்டில் வசிக்கும் ஒரே அளவிலான பல வீடுகளுக்கு சொத்து வரி பலவிதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு சொத்து வரி ரூ.1890-ல் இருந்து ரூ.4890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் உள்ள மற்ற வீட்டிற்கு ரூ.2795, ரூ.3,325, ரூ.3,530 என பலவிதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுபற்றி அம்பத்தூரில் வசித்து வரும் சுவாமிநாதன் கூறுகையில், 1000 சதுர அடியில் உள்ள எனது தனி வீட்டிற்கு ரூ.4350 சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாநகர், பெசன்ட்நகர், மயிலாப்பூரில் உள்ள 1000 சதுர அடி அளவுள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு சொத்து வரியாக ரூ.1350 நிர்ணயித்து உள்ளனர்.

    சென்னை நகரின் மையப் பகுதியில் இருப்பவர்களுக்கு சொத்து வரி குறைவாகவும், புதிதாக இணைந்த அம்பத்தூர், முகப்பேர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஏற்றத்தாழ்வுள்ள, வேறுபாடு உள்ள சொத்து வரியினை அரசு குறைக்க வேண்டும் என்றார்.

    நொளம்பூரில் வசித்து வரும் ஒருவர் கூறும் போது, இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரே அளவுள்ள வீடுகளுக்கு வெவ்வேறு விதமாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அதனை நிவர்த்தி செய்யவில்லை என்றார்.

    இதுகுறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சொத்து வரி கணக்கீடு செய்து நிர்ணயித்ததில் ஒரு சில இடங்களுக்கு மிக அதிகமாக இருப்பதாக பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளுக்கு குறைவாகவும் ஒரு சில இடங்களுக்கு மிக அதிகமாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

    உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து மறு ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இணை கமி‌ஷனர் இந்த கமிட்டியின் தலைவராக செயல்படுவார். வருவாய் அதிகாரி, மண்டல அதிகாரி, உதவி வருவாய் அதிகாரி, ஆகியோர் இதில் இடம் பெறுவார்கள்.

    இந்த கமிட்டி சொத்து வரி உயர்வு குறித்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யும். எந்த அடிப்படையில் குறைப்பது, 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டதை குறைப்பதா? 100 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டதை குறைப்பதா என்பது குறித்து இந்த குழு விவாதித்து முடிவு செய்யும்.

    அதன் பின்னர் அறிக்கை தயார் செய்து 2 மாதத்தில் அரசுக்கு அனுப்பும்.

    எந்த அளவு சொத்து வரி குறைக்கப்படும் என்பதை இப்போது சொல்ல இயலாது. அதை கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார்.
    Next Story
    ×