search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையில் நனைந்தப்படி பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்கள்.
    X
    மழையில் நனைந்தப்படி பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்கள்.

    சென்னையில் நள்ளிரவில் இடி மின்னலுடன் பலத்த மழை

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சென்னை,அக். 16-

    தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னையில் மழை

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு, அதிகாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.

    நேற்று நள்ளிரவு சென்னை, புறநகர் பகுதி களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சென்னை நகரில் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும். சுமார் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது.

    பின்னர் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்ததால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. சென்னை நகரில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் குடைபிடித்தபடி சென்றனர்.

    பஸ்சுக்காக காத்து நின்ற வர்கள் கையில் குடைகளுடன் காணப்பட்டனர். ஒரு சில இடங்களில் போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டது.

    புறநகர் பகுதிகளான தாம்பரம், மதுரவாயல், பூந்தமல்லி, சோழவரம், செங்குன்றம், புழல், பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் மழை பெய்தது.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11.செ.மீ மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 10 செ.மீ, நெல்லை மாவட்டம் ஆயக்குடி, சோழவரம்வரம் தலா 9 செ.மீ, பூண்டி, சிவகாசியில், தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×