search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஹில் ரமானி
    X
    தஹில் ரமானி

    முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, நாளை ஐகோர்ட்டுக்கு வருகிறார்

    முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி நாளை மதியம் 1 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகிறார்.
    சென்னை:

    ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது. இதையடுத்து அவர் தன் பதவியை கடந்த 6ந்தேதி ராஜினாமா செய்தார்.

    இவரது ராஜினாமா கடிதம் கடந்த 13ந்தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய நாளில் இருந்து ஐகோர்ட்டுக்கு, தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி வரவில்லை. இவரது ராஜினாமா நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

    தலைமை நீதிபதியை உருப்படியான காரணத்தை கூறாமல், இடமாற்றம் செய்துள்ளதாக கூறி, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியளவில் அவர் ஐகோர்ட்டுக்கு வருகிறார். மெட்ராஸ் பார் அசோசியே‌ஷன் என்ற வக்கீல் சங்கம் நடத்தும் வழியனுப்பு விழாவில் அவர் கலந்துக் கொண்டு பேசுகிறார்.

    அப்போது தன் விவகாரம் குறித்து பரபரப்பாக பேசலாம் என்று வக்கீல்கள் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு பேச மாட்டார் என்று மற்றொரு தரப்பு வக்கீல்கள் கூறுகின்றனர். இதனால், வக்கீல்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில், வி.கே. தஹில் ரமானிக்கு மூத்த வக்கீல்கள் சிலர் குழுவாக சேர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலையில் விருந்து கொடுக்கின்றனர். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், இந்த விருந்து நடைபெற உள்ளது.
    Next Story
    ×