search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் 7 ஆயிரம் பேனர்கள் அகற்றம்- 650 பேர் மீது வழக்கு

    சென்னையில் இதுவரை 7ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 650 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களை மூன்று கட்டங்களாகப் பிரித்து விளம்பர பேனர்களை அகற்றுவது தொடர்பாக ரோந்துப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 ஆயிரம் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. விளம்பர பேனர்கள் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளனர்.

    3 ரோந்து வாகனங்கள் மூலம் பெறப்பட்ட புகார் அடிப்படையில் பேனர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியம், பாதாள சாக்கடை, தொலைபேசி இணைப்புக் கம்பி பணிகள் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்களுடைய விவரங்களை தானாகவே சரிபார்க்க செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரும் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். பெயரை சேர்ப்பதற்கு படிவம் 6, வாக்காளர் பெயர் நீக்குவது, வாக்காளர் இருக்கும் முகவரி மற்றும் பிற விவரங்களைத் திருத்துவதற்கான படிவங்களும் உள்ளன.

    இந்த செயலியில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட்டு, திருத்தங்கள் சரிபார்க்கப்பட்டு அக்டோபர் 15-ந் தேதி வெளியிடப்பட உள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேனர் மற்றும் ஹோர்டிங் வைக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 650 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வழக்குப்பதிவு செய்வதற்கான சி.எஸ்.ஆர். வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பேனர் வைத்தவர்கள் ரூ.5,000 அபராதமும், ஹோர்டிங் வைத்தவர்கள் மீது ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×