search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 26 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 35 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 2 அணைகளில் இருந்தும் 54 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 71 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 50ஆயிரத்து 279 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 21ஆயிரத்து 667 கனஅடி தண்ணீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட புதுவெள்ளம் தமிழக- கர்நாடக எல்லையான பலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது. பிலிகுண்டுலுவில் நேற்று காலை 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 30-வது நாளாக இன்றும் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளளது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 35 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று காலை 115.85 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று சுமார் ஒரு அடி உயர்ந்து 116.72 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அணை வேகமாக நிரம்ப வாய்ப்புள்ளது.
    Next Story
    ×