search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மரக்கட்டைகள் பறிமுதல்
    X
    செம்மரக்கட்டைகள் பறிமுதல்

    தூத்துக்குடியில் ரூ.3½ கோடி செம்மரக்கட்டைகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்? லாரி டிரைவரிடம் விசாரணை

    தூத்துக்குடியில் ரூ.3½ கோடி செம்மரக்கட்டைகள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்று லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி துறைமுகம் அருகே அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மதுரை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து வந்த கன்டெய்னர் லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த கன்டெய்னரில் சட்டவிரோதமாக 8.17 மெட்ரிக் டன் எடையிலான செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த செம்மரக்கட்டைகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக கப்பலில் துபாய்க்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கன்டெய்னரில் இருந்த செம்மரக்கட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.3½கோடி ஆகும்.

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவரான மதுரையை சேர்ந்த குமார் என்பவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்று விசாரணை நடத்தப்படுகிறது. இதுபோன்று வேறு ஏதேனும் கன்டெய்னர் லாரி மூலம் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு இருக்கலாமோ? என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த செம்மரக்கட்டைகள் வெளிநாடுகளில் மருந்து பவுடர் மற்றும் இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×