search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நூதன முறையில் வெள்ளை பேப்பரை 2 ஆயிரம் ரூபாயாக மாற்றுவதாக மோசடி - 2 பேர் கைது

    நூதன முறையில் வெள்ளை பேப்பரை 2 ஆயிரம் ரூபாயாக மாற்றுவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள துரைசிங்நகரை சேர்ந்தவர் மரிய அந்தோணி (வயது 56), திருமண புரோக்கர். இவருக்கு சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் (46) என்பவருடன் அறிமுகம் கிடைத்தது. அவர் வெள்ளை பேப்பரில் சில கெமிக்கல் களை சேர்த்தால் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.

    அதனை உண்மை என நம்பிய மரிய அந்தோணியிடம் ரூ. 1.25 லட்சம் பணம் கொடுத்தால் வெள்ளை பேப்பரில் பணத்தை உருவாக்கி காட்டுகிறேன் எனவும், நீங்கள் அதே போல் செய்து பணத்தை உருவாக்கலாம் என்றும் கூறினார்.

    இதையடுத்து ரூ.1.25 லட்சம் பணம் கொடுக்க மரிய அந்தோணி சம்மதம் தெரி வித்தார். அதனைத் தொடர்ந்து கெமிக்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு பால்பாண்டி தூத்துக்குடிக்கு வந்தார். முதலில் மண்பானை ஒன்றில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துள்ளார்.

    பின் கெமிக்கல் போன்ற திரவத்தை அதில் ஊற்றி 2 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கச்சிதமாக வெள்ளை பேப்பரை வெட்டி அதனுள் போட்டுள்ளார். பின்னர் மண்பானையில் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புதிதாக உருவாக்கியதாக கூறி மரிய அந்தோணியிடம் கொடுத்துள்ளார்.

    அதன் பின் இந்த முறைகளை பயன்படுத்தி 12-ல் இருந்து 24 மணி நேரத்திற்குள் இதுபோன்று செய்தால் பணம் கிடைக்கும் என கூறினார். அதன்படி நேற்று மாலை முதல் இன்று காலை வரை மரிய அந்தோணி மண்பானையில் இருந்த கெமிக்கலில் வெள்ளை பேப்பரை போட்டு சோதனை செய்தார். ஆனால் அவருக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.

    இதனை பால்பாண்டியனிடம் கூறிய போது, அவர் மீண்டும் முயற்சிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலை போலீசாருக்கு இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளமுத்து நகர் போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பால்பாண்டியன் இதே போன்று கேரளாவில் 2 பேரிடம் மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    Next Story
    ×