search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்தி வரதர்
    X
    அத்தி வரதர்

    இன்று கட்டுக்கடங்காத கூட்டம்- அத்தி வரதர் தரிசனம் நாளையுடன் முடிகிறது

    அத்தி வரதர் தரிசனம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் கடந்த ஒரு வாரமாக தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது.

    முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

    அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடி வருகிறது.

    அத்திவரதர் தரிசனம் நாளையுடன் (16-ந் தேதி) முடிவடைகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக அத்தி வரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. தினந்தோறும் சுமார் 5 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் ஓய்வு எடுக்கவும் ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை காஞ்சிபுரத்தில் பலத்த மழை கொட்டியது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டு சென்றனர். நேற்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    விழாவின் 46-வது நாளான இன்று அத்திவரதர் மலர்களால் புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று சுதந்திரதின விடுமுறை நாள் என்பதாலும், நாளையுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய உள்ளதாலும் காலையிலேயே சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. காந்தி ரோடு, ரங்கசாமி குளம், செட்டித்தெரு, பெரியார் நகர், முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தி பக்தர்களை நிறுத்தி, நிறுத்தி அனுப்பி வருகிறார்கள்.

    இதேபோல் ஓய்வு எடுக்க அமைக்கப்பட்டு உள்ள கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள 2 கூடாரங்கள், பெரியார் நகர் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட கூடாரம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை வழிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆடி கருட சேவை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 12 மணியுடன் அத்திவரதர் தரிசனத்துக்காக கிழக்கு கோபுர வாசல் நடை சாத்தப்பட்டது. இதேபோல் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வாயிலும் இன்று மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்டது.

    கோவிலின் உள்ளே இருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    கருடசேவை விழா முடிந்ததும் இரவு 8 மணிக்கு மேல் நள்ளிரவு வரை வழக்கம் போல் பக்தர்கள் தொடர்ந்து அத்திவரதரை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

    விழாவின் இறுதி நாளான நாளை (16-ந் தேதி) பொது தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வி.ஐ.பி. தரிசனம் கிடையாது.

    பொது தரிசனத்தில் செல்லக் கூடிய பக்தர்கள் மாலை 5 மணி வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் கோவிலின் உள்ளே உள்ள பக்தர்கள் அனைவரும் நள்ளிரவு வரை அத்திவரதரை வழிபடலாம்.

    நாளை மறுநாள் (17-ந் தேதி) அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அன்று ஆகம விதிப்படி பூஜைகள் செய்து அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடு பணிகள் முடிந்து உள்ளன.

    இதுவரை அத்திவரதரை 90 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வழிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×