search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வளசரவாக்கத்தில் ஆயுர்வேத டாக்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை

    சென்னை வளசரவாக்கத்தில் ஆயுர்வேத டாக்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் 2-வது பிரதான சாலையில் வசித்து வருபவர் சி.என்.தங்கதுரை (51). ஆயுர் வேத மருத்துவர். அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

    சென்னை மட்டுமின்றி மதுரை, ஆண்டிப்பட்டியிலும் இவருக்கு கிளினிக் உள்ளது. சென்னையில் தங்கி இருந்த அவர் கடந்த 6 மாதமாக மதுரைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று வளசரவாக்கம் வந்த அவர் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு அறையில் இருந்த அலமாரியில் வைக்கப்பட்ட 150 பவுன் நகையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பைப் டேப்புகளும் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது. வீடு பூட்டியே கிடந்ததால் ஒட்டடை மற்றும் தூசுகள் நிறைந்து காணப்பட்டது.

    இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் அவர் புகார் செய்தார். உதவி கமி‌ஷனர் மகிமை வீரன் மற்றும் இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    வீடு 6 மாதமாக பூட்டி கிடந்ததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் புகுந்தார்களா? வீட்டுக்குள் வேறு எந்த பொருளையும் வைக்காமல் தங்க நகையை மட்டும் டாக்டர் தங்கதுரை வைத்திருந்ததாக சொல்வது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் வைத்திருந்த எல்லா பொருட்களையும் அவர் எடுத்து சென்று விட்ட நிலையில் தங்க நகைகளை மட்டும் ஏன் வைத்து சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து நகையை எடுத்து சென்றார்களா? அல்லது கொள்ளை போனதாக நாடகம் ஆடுகிறாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும் அந்த அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பூட்டி கிடந்த வீட்டிற்குள் யாரும் நுழைந்தர்களா? என்பதை கேமரா மூலம் கண்டறிந்தால் உண்மை தெரிந்து விடும் என்று ஆய்வு செய்கின்றனர்.

    மேலும் டாக்டர் தங்கதுரையிடமும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. வீட்டை காலி செய்து குடும்பத்தோடு மதுரை சென்ற பிறகு எதற்காக நகையை மட்டும் வைத்து சென்றீர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×