search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    சென்னையில் அடுத்த வாரம் முதல் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம்

    சென்னையில் அடுத்த வாரம் முதல் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    மெட்ரோ ரெயிலில் தினமும் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் மெட்ரோ ரெயிலுக்கு பயணிகள், பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.

    தற்போது தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    சாதாரண நேரங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணி, 10 மணி முதல் மாலை 5 மணி, இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பயணிகள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேர இடைவெளியை குறைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி இன்று 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

    மேலும் மெட்ரோ பயணிகள் வசதிக்காக ரூ. 10-க்கு வாடகை கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் மெட்ரோ ரெயிலில் அலைமோதுகிறது.

    இதனால் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. அடுத்த வாரம் முதல் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×