search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் பாதை
    X
    ரெயில் பாதை

    கன்னியாகுமரியில் இருந்து குற்றாலத்திற்கு களக்காடு வழியாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

    கன்னியாகுமரியில் இருந்து குற்றாலத்திற்கு களக்காடு வழியாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    களக்காடு:

    களக்காடு வளர்ந்து வரும் நகரமாகும். தொழில் துறை, விவசாய துறைகளில் முன்னோக்கி செல்கிறது. தென் மாவட்டங்களில் முக்கிய சுற்றுலா தலமாக தலையணை அமைந்துள்ளதால் சுற்றுலா துறையிலும் முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. ராமர் வழிபட்ட சத்தியவாகீஸ்வரர் திருக்கோவிலும் அமைந்துள்ளதால் ஆன்மீக தலமாகவும் திகழ்கிறது. களக்காடு மற்றும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தினசரி தொழில் நிமித்தமாகவும், மற்ற தேவைகளுக்காகவும் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். தொலைதூர நகரங்களுக்கு செல்வோர் ரெயில்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.

    பெண்கள், முதியவர்கள் பயணம் செய்ய ரெயில்களையே நம்பி உள்ளனர். ஆனால் களக்காடு பகுதி பொதுமக்கள் ரெயிலில் செல்ல வேண்டுமானால் நாங்குநேரிக்கோ, வள்ளி யூருக்கோ, நெல்லைக்கோ செல்ல வேண்டியுள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சென்று ரெயில்களை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா தலங்களான கன்னியாகுமரிக்கும், குற்றாலத்திற்கும் நேரடியாக ரெயிலில் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு செல்ல நெல்லை வழியாக செல்ல வேண்டியதுள்ளது. எனவே குற்றாலம், கன்னியாகுமரியை இணைக்கும் வகையில் களக்காடு வழியாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது வள்ளியூர் மற்றும் சேரன்மாதேவியில் ரெயில் பாதை உள்ளது. இதனை இணைக்கும் வகையில் சேரன் மாதேவியில் இருந்து களக்காடு, திருக்குறுங்குடி, ராஜபுதூர் வழியாக வள்ளியூருக்கு இணைப்பு ரெயில் பாதை அமைத்தால் போதும். இவ்வாறு களக்காடு வழியாக ரெயில் பாதை அமைத்தால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு, வள்ளியூர், களக்காடு, சேரன்மாதேவி வழியாக ரெயில் இயக்கவும் வழி பிறக்கும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுபோல் களக்காட்டில் இருந்து குற்றாலத்திற்கும், நெல்லைக்கும், நாகர் கோவிலுக்கும் பயணிகள் ரெயில் இயக்கவும் முடியும். இதனால் பஸ்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் குறையும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    களக்காட்டில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சி நடத்த வரும் ஆராய்ச்சியாளர்கள் நெல்லைக்கு வந்து அங்கிருந்து வாகனங்களில் களக்காடு வருகின்றனர். களக்காடு வழியாக ரெயில் இயக்கப்பட்டால் அவர்கள் நேரடியாகவே களக்காட்டிற்கு வரலாம்.

    எனவே களக்காடு வழியாக ரெயில் பாதை அமைத்து வெளியூர்களுக்கு ரெயில்கள் இயக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×