search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை குளிப்பாட்டும் போலீசார்.
    X
    மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை குளிப்பாட்டும் போலீசார்.

    சாலையில் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த வாலிபரை மீட்டு குளிக்க வைத்து உபசரித்த போலீசார்

    சென்னையில் பரபரப்பான சாலையில் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த வாலிபரை போலீசார் மீட்டு குளிக்க வைத்து புத்தாடை வாங்கி கொடுத்து உபசரித்த செயலை அனைவரும் பாராட்டினர்.
    சென்னை:

    மணலி உள்வட்ட சாலை பகுதியில் இன்று காலை 10 மணி அளவில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் சாலையின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.

    இந்த சாலையில் எப்போதும் லாரி போக்குவரத்து அதிகமாக இருக்கும். வாலிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள் சிலர் நிதானமாக வண்டியை ஓட்டி சென்றனர்.

    இந்த நேரத்தில் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர் சோபிதாஸ் மற்றும் போலீசார் உடனடியாக மனநலம் பாதித்த வாலிபரை மீட்டனர். அவரை குளிக்க வைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் சோபிதாஸ் புது சட்டையும் பேண்ட்டும் வாங்கி கொடுத்தார். மற்ற போலீசார் அந்த ஆடையை வாலிபருக்கு அணிவித்தனர். இதன் பின்னர் அருகில் உள்ள ஒரு கடையில் சாப்பாடும் வாங்கி கொடுத்து உபசரித்தனர்.

    மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சாப்பிடுவதை படத்தில் காணலாம்.

    அவரிடம் பெயர் மற்றும் ஊர் விவரங்களை போலீசார் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் தனது பெயர் விமலன் என்று தெரிவித்தார். தனது ஊரை பற்றி குறிப்பிட்ட அவர் பெங்களூர் என்றும், ஆண்டாள்குப்பம் என்றும் மாறி மாறி கூறினார்.

    மீட்கப்பட்ட வாலிபரை காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து போலீசாரின் இந்த மனிதாபிமான செயலை வாகன ஓட்டிகள் பாராட்டினர். உயர் போலீஸ் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்து உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை மீட்ட இன்ஸ்பெக்டர் சோபிதாஸ் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.
    Next Story
    ×