search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைத்த காட்சி.
    X
    கரூரில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைத்த காட்சி.

    கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

    கரூரில் ரூ.269 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    சென்னை:

    இந்திய மருத்துவக் குழும விதிகளின்படி கரூர் சனபிரெட்டி கிராமத்தில் 269 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு அரசாணை 27.6.2018 அன்று வெளியிடப்பட்டது.

    அதன்படி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 115 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து, முதலாம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பினையும் தொடங்கி வைத்தார்.

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் குழும விதிகளின்படி, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்குத் தேவையான இயல்கூடம், நிர்வாகக் கட்டடம், மாணவ - மாணவிகள் தங்கும் விடுதிகள், முதல்வர் குடியிருப்பு, மருத்துவ ஆசிரியர்கள் குடியிருப்பு, செவிலியர் விடுதி, உறைவிட மற்றும் உதவி உறைவிட மருத்துவ அலுவலர், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் குடியிருப்புகள் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் 115 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான மருத்துவக் கருவிகள் வழங்க 25 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த மருத்துவக் கல்லூரிக்கு தேவையான மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் செய்யும் பொருட்டு, இந்திய மருத்துவக் குழும விதிகளின்படி 985 நிரந்தர பணியிடங்களும், புற ஆதார முறையில் நியமனம் செய்ய 57 பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் 150 மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் குழுமத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

    அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, புதிதாக நிறுவப்பட்டுள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் உட்பட, கூடுதலாக 1350 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி நடப்பு கல்வி ஆண்டு முதல் 23வது அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் செந்தில்ராஜ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர். எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் ஸ்வாதி ரத்னாவதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×