search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரவாயலில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.29 லட்சம் கொள்ளை

    மதுரவாயலில் வெளியூர் சென்றிருந்த தொழில் அதிபர் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.29 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    மதுரவாயல் ஆலப்பாக்கம் ஆண்டாள் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சத்திய நாராயணன் (42). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    நேற்று தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலையில் வீட்டிற்கு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த ரூ.29 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது.

    சத்தியநாராயணன் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்துள்ளது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் - நகையை அள்ளிச் சென்றுள்ளனர்.

    மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

    தொழில் ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதா? அவர் தொழில் சார்ந்த யாரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

    இவ்வளவு பெரிய தொகையை வீட்டில் வைத்து சென்றது ஏன்? எதற்காக இந்த பணம் வைக்கப்பட்டது, யாருக்கு கொடுக்க வைத்திருந்தார் என்றும் சத்தியநாராயணனிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    சந்தேகப்படும்படியான குற்றவாளிகள் இதில் ஈடுபட்டார்களா? அல்லது புதிய கொள்ளையர்களா? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

    இதேபோல நெற்குன்றத்திலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சரஸ்வதி காலனி மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சங்கரன் (47). கட்டிட காண்ட்ராக்டர்.

    இவர் குடும்பத்தோடு கடந்த 26-ந்தேதி குற்றாலம் சென்றார். நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவில் இருந்த 16½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி கோயம்பேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    2 கொள்ளை சம்பவத்திலும் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதால் ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    Next Story
    ×