என் மலர்

  செய்திகள்

  ஏடிஎம் மிஷினில் கேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்துவதை விளக்கும் படம்
  X
  ஏடிஎம் மிஷினில் கேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்துவதை விளக்கும் படம்

  ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளையடித்தது எப்படி? - பரபரப்பு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளையடித்தது எப்படி என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
  சென்னை:

  சென்னை அயனாவரத்தில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் கடந்த 16-ந்தேதி ஸ்கிம்மர் கருவியும், சிறிய கேமராவும் பொருத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து அயனாவரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

  அப்போது ஏ.டி.எம்மில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்களை தெரிந்து கொள்வதற்காக ஸ்கிம்மர் கருவியையும், சிறிய கேமராவையும் பொருத்தி இருந்தது தெரிய வந்தது.

  இதையடுத்து வங்கி ஏ.டி.எம். முன்பு பொதுமக்களும் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  உதவி ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன்

  இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து வங்கி மோசடி தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமி‌ஷனர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் செல்வராணி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஏ.டி.எம்மில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

  பின்னர் கொளத்தூரை சேர்ந்த இர்பான், ஏழுக்கிணறு அல்லா பக்கஷ், மாங்காட்டை சேர்ந்த அப்துல் ஹாதி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

  இவர்கள் 3 பேரும் அயனாவரம் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள், லேப்-டாப், ரூ.63 ஆயிரத்து 600 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

  3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் மிகவும் துணிச்சலுடன் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் இதுபோன்று ஸ்கிம்மர் மற்றும் சிறிய கேமராக்களை பொருத்தி லட்சக்கணக்கில் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.

  போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கும், ஸ்கிம்மர் கருவி பொருத்துவதற்கும் 3 பேரும் ஆடி காரிலேயே சென்று வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

  போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் பறிக்கும் இந்த திட்டத்திற்கு இர்பான் மூளையாக செயல்பட்டு உள்ளார்.

  கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தான் கற்ற கல்வியை நவீன முறையில் கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தி உள்ளார். இர்பானின் ஆலோசனையின் பேரில் அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி இருவரும் செயல்பட்டு உள்ளனர்.

  ஏ.டி.எம். மையங்களில் லட்சக்கணக்கில் கைவரிசை காட்டிய பின்னர் அதனை 3 பேரும் பங்கு போட்டு பிரித்துள்ளனர். இதில் கும்பல் தலைவனாக செயல்பட்ட இர்பானுக்கு 70 சதவீதம் பணம் கிடைத்துள்ளது. மீதி 30 சதவீதம் பணத்தை மற்ற 2 கொள்ளையர்களும் பிரித்து கொண்டனர்.

  இதனால் இவர்களுக்குள் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. சத்தம் இல்லாமல் பல ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்களின் பணத்தை போலி கார்டுகளை பயன்படுத்தி எடுத்து உள்ளனர்.

  ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்துவதற்கு ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களையே 3 பேரும் தேர்வு செய்துள்ளனர். ஆடி காரில் சென்று ஏ.டி.எம். மையம் முன்பு இறங்குவதால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படுவது இல்லை.

  இதனை பயன்படுத்தி சத்தம் இல்லாமல் ஏ.டி.எம். கார்டை சொருகும் இடத்தில் ஸ்கிம்மர் கருவியும், பின் போடும் இடத்தில் சிறிய கேமராவையும் பொருத்தி ரகசிய எண்ணையும், கார்டு நம்பரையும் தெரிந்து கொண்டுள்ளனர்.

  இதனை இர்பான் தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதன் மூலமாக போலியான கார்டுகளை தயாரித்துள்ளார்.

  இது போன்று சென்னை மாநகர் முழுவதும் 3 பேரும் கைவரிசை காட்டி உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் இர்பான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஸ்கிம்மர் மற்றும் கேமராவை பொருத்தி இருப்பது தெரிகிறது.

  இதையடுத்து போலீசார் வங்கி அதிகாரிகளின் துணையுடன் சென்னையில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த ஆய்வின் போது ஸ்கிம்மர் கருவிகளோ அல்லது சிறிய கேமராக்களோ பொருத்தப்பட்டிருந்தால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

  கைதான 3 பேரையும் தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் பலர் தினமும் தங்களது பணத்தை பறிகொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்களும் குவிந்து வருகின்றன.

  மத்திய குற்றப்பிரிவில் செயல்பட்டு வரும் வங்கி மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து வந்தாலும், புதிது புதிதாக போலி ஏ.டி.எம். கொள்ளையர்கள் உருவாகி கொண்டே இருக்கிறார்கள். இதனால் வங்கிகளில் லட்சக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  Next Story
  ×