search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணை
    X
    முல்லைப் பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது - துணை கண்காணிப்பு குழுவினர் உறுதி

    முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக துணைக் கண்காணிப்பு குழுவினர் உறுதியளித்துள்ளனர்.
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் மூவர் குழு அமைத்தது. மேலும் அவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அணையை கண்காணித்து மூவர் குழுவிற்கு அறிக்கை சமர்பித்து வருகின்றனர்.

    இதன் தலைவராக மத்திய நீர் வள ஆணைய செயற்பொறியாளர் சரவண பிரபு உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட பொறியாளர் (பொறுப்பு) சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர் பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜா பாய், உதவி பொறியாளர் பிரசித் ஆகியோர் உள்ளனர்.

    தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 112.45 அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று துணைக் கண்காணிப்பு குழுவினர் அணை பகுதியில் ஆய்வு செய்தனர்.

    கேலரி பகுதி பேபி அணை மற்றும் அணையில் கசிவு நீர் அளவு கணக்கிடப்பட்டது. நீர் மட்ட அளவுக்கு கசிவு நீர் துல்லியமாக உள்ளதால் அணை பலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேபி அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவது மற்றும் அணைக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மதகுகளின் இயக்கம் சரியாக உள்ளது. பருவமழை தீவிரமடையும் பொழுது அடுத்த கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×