search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் அரிசி கடத்தி 10 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது
    X

    ரே‌ஷன் அரிசி கடத்தி 10 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது

    கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி கடத்தி 10 ஆண்டு தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர்:

    தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு இலவசமாக அரிசியை வழங்கி வருகிறது. இதனை ரே‌ஷன் கடைகள் மூலமாகவும், தரகர்கள் மூலமாகவும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரிசியை வாங்கி டன் கணக்கில் லாரிகள் மூலம் ஆந்திராவுக்கு கடத்துவது தொடர் கதையாக இருந்தது.

    லாரிகள், படகுகள், ரெயில்கள் மூலமாகவும் கடத்தி வந்ததால் காவல் துறை, வருவாய்த்துறை என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறை என அனைத்து துறையினரும் வாகன சோதனை நடத்தி வந்தனர்.

    அப்போது கடத்தலில் ஈடுபடும் லாரி ஓட்டுனர்கள், தரகர்கள் என ஒரு சிலரே கைது செய்யப்பட்டு வந்தனர். டன் கணக்கில் அரிசியை கடத்தும் நபரை கைது செய்ய போலீசார் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்தது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(50) தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு அரிசியை கடத்துவது தெரியவந்தது.

    இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஜெயச்சந்திரன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது.

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு இன்ஸ்பெக்டர் மைனர்சாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் தலைமையிலான போலீசார் ஆந்திர மாநிலம் எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் பகுதியில் முகாமிட்டு ஜெயச்சந்திரன் ஆரம்பாக்கம் வந்த போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், தமிழகத்தில் ரே‌ஷன் கடை மற்றும் தரகர்கள் மூலமாக குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதை ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் கர்நாடக மாநிலம் பங்கனப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைக்கு அனுப்பி வைத்து ஒரு கிலோ அரிசி 15 முதல் 20 ரூபாய் வரைக்கும் விற்பதாக தெரியவந்தது.

    மேலும் அரிசி ஆலையில் அதனை பாலீஷ் செய்து மீண்டும் தமிழகத்திற்கே 40 ரூபாய் 50 ரூபாய் என தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்புவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அரிசி கடத்தல் மன்னன் ஜெயச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×