search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடியுடன் வைகோ போராட்டம்- மதிமுக-வினர் உள்பட 350 பேர் கைது
    X

    பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடியுடன் வைகோ போராட்டம்- மதிமுக-வினர் உள்பட 350 பேர் கைது

    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக-வினர் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தமிழகத்துக்கு எதிராகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களை வஞ்சிக்கும் அவர் மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும்போது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மதிமுக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடும் என்று வைகோ அறிவித்தார்.

    அறிவிப்பை தொடர்ந்து மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை அருகே இன்று காலை முதலே மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் கறுப்புக்கொடியுடன் திரண்டனர்.

    அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் வைகோ அங்கு வந்தார். உடனே தொண்டர்களும், நிர்வாகிகளும் “தமிழக மக்களை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப்போ” என்று கோ‌ஷம் எழுப்பினர். கறுப்பு நிற பலூன்களையும் பறக்க விட்டனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை கமி‌ஷனர் அசோகன் உங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தார். அதற்கு வைகோ பிரதமர் மோடி மதுரையை விட்டு கிளம்பும் வரை இந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்றார்.

    அந்த சமயத்தில் போலீஸ் அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால் தென் சென்னை மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோரை போலீசார் வலுக்கட்டாயமாக பஸ்சில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது.

    பின்னர் வைகோவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்ட செயலாளர்களை போலீசார் விடுவித்தனர். அதன்பிறகு தொடர்ந்து போராட்டம் நடந்தது. இதில் வைகோ பேசினார். அதன்பின்னர் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 150 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.



    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கட்சியினர் மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் விளக்குத்தூண் அருகில் மறித்தனர். இதில் கட்சியின் தலைவர் தமிழ்நேசன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதேபோன்று திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம் ராமகிருஷ்ணன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 200 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×