search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
    X
    தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

    3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்காததால் சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர், மேல்சிந்தாமணியூர் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் டி.வி.மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.

    இன்று காலை இவர் மனு கொடுப்பதற்காக சேலம் கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார். அப்போது அவர், கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு நின்று பையில் இருந்து ஒரு கேனை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை திடீரென தலையில் ஊற்ற முயன்றார்.

    இதை பார்த்ததும் போலீசார் அங்கு ஓடி வந்து தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை வாங்கி அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கோபிநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளியான நான், டி.வி.சரிபார்க்கும் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன். 3 சக்கர மோட்டார் சைக்கிள் கேட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தேன். இது சம்பந்தமாக இரண்டு முறை நேர்காணலிலும் பங்கேற்றேன். இதுவரை எனக்கு மோட்டார் சைக்கிள் தரவில்லை. எந்த பலனும் இல்லாததால் எனக்கு வாழ விருப்பமில்லை. எனவே நான், தீக்குளித்து சாக போகிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இது பற்றி தகவல் தெரிவித்து போலீசார், மாற்றுத்திறனாளி நல அலுவலரை அங்கு அழைத்து வந்தனர். அவர், கோபிநாத்திடம் கூறுகையில், பட்டியலில் உங்களது பெயர் உள்ளது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் வரிசையாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உங்களுக்கு மோட்டார் சைக்கிள் நிச்சயம் கிடைக்கும் என்றார்.

    மேலும் போலீசார், கோபிநாத்துக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×