search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 262 ஏக்கர் நிலம் தர தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
    X

    தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 262 ஏக்கர் நிலம் தர தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 262 ஏக்கர் நிலம் தர தயார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
    மதுரை:

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான முயற்சி மேற்கொண்டார். அவர் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அது தவிர திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தென்மாவட்ட மக்களின் இதயக்கனியாக மதுரையில் அமைய உத்தரவு பெற்றுத் தந்துள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் என்றென்றும் தமிழக மக்கள் கடமைப்பட்டு உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 200 ஏக்கர் நிலம் மட்டுமின்றி, கூடுதலாக விரிவாக்கம் செய்ய வசதியாக 62 ஏக்கர் நிலம் என மொத்தம் 262 ஏக்கர் நிலம் தர அரசு தயார் நிலையில் உள்ளது.

    அதனை அளந்து செம்மைப்படுத்தி வருவாய்த்துறையினர் சார்பில் ஒப்படைக்கும் பணிகளின் தொடக்கமாக இன்றே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அது தவிர நான்கு வழிச்சாலையை ஒட்டி புதிய இணைப்புச்சாலை, குடிநீர் வசதி, மின்சாரம் என மத்திய அரசு தெரிவித்துள்ள அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. எனவே மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைக்கு மிக அருகே, மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு 15 கி.மீ. தொலைவில், மதுரை ரெயில் நிலையத்திற்கு 14 கி.மீ தொலைவில் என அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் 19 மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

    ஏற்கனவே மருத்துவ நகரமாக விளங்கும் மதுரையில் அமைந்துள்ள ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்டிற்கு 29 லட்சம் வெளிநோயாளிகளும், 19 லட்சம் உள்நோயாளிகளும் பயன் பெற்று வருகிறார்கள். இதற்கெல்லாம் மணி மகுடமாக இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் உயர்தர சிகிச்சை 19 மாவட்டங்களை சேர்ந்த ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×