search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பிரார்த்தனை
    X

    குமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பிரார்த்தனை

    குமரி மாவட்டம் முழுவதும் உள்ள 589 சி.எஸ்.ஐ. தேவாலயங்களிலும் இன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    நாகர்கோவில்:

    இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த் தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலத்தையும் கடைபிடிப்பார்கள். அதன் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையுடன் கொண்டாடப்படும். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசுகிறிஸ்து பஸ்கா நகருக்கு சென்றபோது அவரை அந்த ஊர் மக்கள் தங்கள் கைகளில் ஒலிவ மர கிளைகளை கைகளில் ஏந்தியும் ஓசன்னா பாடல் பாடியும் வரவேற்றனர்.

    அதை நினைவுகூரும் வகையில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.

    குமரி மறைமாவட்ட தலைமை பேராலயமான நாகர்கோவில் கோட்டார் தூய சவேரியார் பேராலயத் தில் இன்று ஆயர் நசரேன் சூசை தலைமையில் குருத் தோலை பவனி காலை 6.30 மணிக்கு நடந்தது. திரளான மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி பவனியாக வந்தனர். மறை மாவட்ட செயலாளர் அருள் இம்மானுவேல், பொருளாளர் அலேசியஸ்பென்சிகர், மறை வட்ட முதல்வர் மைக்கேல் ஆஞ்சலோஸ், சவேரியார் ஆலய பங்குத்தந்தை குணபால் ஆராய்ச்சி, இணை பங்குத்தந்தை சகாய ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பவனி கோட்டார் ஆலயத்தை அடைந்ததும் ஆயர் நசரேன்சூசை தலை மையில் திருப்பலி நடந்தது. மேலும் ஆயர் எழுதிய இயேசுவின் இறுதி 7 நாட்கள் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. இதேபோல வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் உள்பட மாவட் டம் முழுவதும் உள்ள ஆலயங்களில் பவனியுடன் பிரார்த்தனை நடந்தது.

    இதேபோல சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் குருத்தோலை பவனி நடைபெற்றது. நாகர்கோவில் ஹோம் சர்ச்சில் நாகர்கோவில் சேகரத்து போதகர் ஏ.ஆர். செல்லையா தலைமையிலும் கிரைஸ்டு சர்ச்சில் சேகரத்து போதகர் ஸ்டான்லி ஜோஸ் தலைமையிலும் குருத்தோலை பவனி நடந்தது.

    மாவட்டம் முழுவதும் உள்ள 589 சி.எஸ்.ஐ. தேவாலயங்களிலும் இன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து வருகிற வியாழக்கிழமை (29-ந்தேதி) பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடைபெறும். இயேசுகிறிஸ்து தனது சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மறுநாள் 30-ந்தேதி புனித வெள்ளிக்கிழமையாகும். இயேசுவை சிலுவையில் அறைந்ததை நினைவுகூரும் வகையில் அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அதைதொடர்ந்து 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.

    Next Story
    ×