search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசந்தமணி உடல் பரிசோதனை நிறுத்திவைப்பு: வேலூர் ஜெயில் - ஆஸ்பத்திரியில் நீதிபதி விசாரணை
    X

    வசந்தமணி உடல் பரிசோதனை நிறுத்திவைப்பு: வேலூர் ஜெயில் - ஆஸ்பத்திரியில் நீதிபதி விசாரணை

    வசந்தமணி பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டுள்ளார். வசந்தமணி அடைக்கப்பட்டிருந்த சிறை அறையையும் பார்வையிட்ட நீதிபதி, சக கைதிகளிடமும் விசாரணை நடத்தினார்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கி கைதான வசந்தமணி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இறந்தார். அவருக்கு சுமிதா என்ற மனைவி, 1 மகள், 1 மகன் உள்ளனர்.

    வசந்தமணி சாவுக்கு காரணமானவர்களை கைதுசெய்யக்கோரி அவருடைய மனைவி சுமிதா மற்றும் உறவினர்கள் போளூரில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    போளூர் போலீசில் சுமிதா புகார் கொடுத்ததை வாங்க மறுத்து வேலூர் பாகாயம் போலீஸ்நிலையத்தில் கொடுக்குமாறு கூறிவிட்டனர். வசந்தமணி இறந்தது குறித்து வேலூர் மத்தியசிறை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பாகாயம் போலீசில் புகார் செய்தார்.

    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன்னிலையில், வசந்தமணியின் உடல் பிரேதபரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்குவந்த வசந்தமணியின் மனைவி சுமிதா, எம்.எல்.ஏ.வை கைதுசெய்யும் வரை பிரேதபரிசோதனை செய்யக்கூடாது என்றும், உடலை வாங்கமாட்டோம் என்றும் நீதிபதியிடம் கூறினார்.

    அவர் நீதிபதி கனகராஜிடம் புகார் மனு கொடுத்தார். அதில் எனது கணவரை தாக்கிய எம்.எல்.ஏ., அவருடைய ஆதரவாளர்கள்மீது போளூர் போலீசில் புகார்கொடுத்தேன். அதை போலீசார் வாங்க மறுத்துவிட்டனர். எனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்குத்தொடர இருக்கிறேன். கோர்ட்டு உத்தரவு வரும் வரை பிரேதபரிசோதனை செய்யக்கூடாது. உடலையும் வாங்கமாட்டோம். அதுவரை மருத்துவமனையில் உடலை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

    வேலூர் மருத்துவமனை டாக்டர்கள் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக செயல்படுவதால் சென்னை டாக்டர்கள் மூலம்பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதையடுத்து பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டுள்ளார். அதுவரை வசந்தமணி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    வசந்தமணி உடல் வைக்கப்பட்டுள்ள வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வசந்தமணியின் மனைவி மற்றும் உறவினர்கள் இன்று திருவண்ணாமலை கலெக்டரை சந்தித்து புகார் செய்ய உள்ளனர்.

    இந்தநிலையில் வசந்தமணி உயிரிழப்பு தொடர்பாக நீதிபதி கனகராஜ், வேலூர் ஆண்கள் ஜெயிலில் நேற்று மாலை 4 மணியளவில் விசாரணை நடத்தினார்.

    2-ம் கட்ட விசாரணைக்காக இன்று மதியம் 12 மணியளவில் நீதிபதி கனகராஜ், மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு சென்றார்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு வசந்தமணியின் உடல்நிலை எந்த மாதிரியான நிலையில் இருந்தது, சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனரா? போன்றவை குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் வசந்தமணி அடைக்கப்பட்டிருந்த சிறை அறையையும் பார்வையிட்ட நீதிபதி, சக கைதிகளிடமும் விசாரணை நடத்தினார். சிறைத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

    அதேபோல் வசந்தமணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தினார். #tamilnews

    Next Story
    ×