search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் 25 லட்சம் பேர் தயார்
    X

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் 25 லட்சம் பேர் தயார்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் 25 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. கட்சியில் உள்ள ரஜினி ரசிகர்கள் விலகிவிடுவார்களோ என்கிற கலக்கம் நிர்வாகிகள் மத்தியில் நிலவி வருகிறது.

    சென்னை:

    ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதிய கட்சியை தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ரஜினி அதற்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கி விட்டார். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர் பொது மக்களையும் தனது கட்சியில் இணைக்க காய் நகர்த்தி வருகிறார்.

    இதற்காக புதிய இணையதளத்தையும் தொடங்கி உள்ளார். இப்படி அரசியல் பிரவேசத்துக்கான ஆயத்த பணிகளை ரஜினி முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரஜினி மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரசிகர்கள், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.

    ரஜினி மன்றங்களை பொறுத்தவரையில் பதிவு செய்யப்பட்ட மன்றங்கள், பதிவு செய்யப்படாத மன்றங்கள் என 2 வகைகளாக உள்ளன.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் மன்றங்கள் செயல்பட்டு வருவதாக ரஜினி மன்றத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் இன்று தெரிவித்தார். சென்னையில் பதிவு செய்யப்பட்ட 2,500 ரசிகர்மன்றங்கள் உள்ளன. பதிவு செய்யப்படாத மன்றங்கள் 3,500 வரையில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மன்றத்திலும் 25 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இதில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணை தலைவர், துணை செயலாளர் ஆகிய 5 நிர்வாக பொறுப்புகள் உள்ளன. இதன்படி பார்த்தால் சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சேர்த்து 25 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் ரஜினியின் கரத்தை பலப்படுத்துவதற்கு தயாராகி விட்டனர்.

    ரஜினி ரசிகர்களாக இருக்கும் பலர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பதுடன் பல்வேறு கட்சிகளிலும் உறுப்பினராக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் எனது ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்தமான கட்சிகளுக்கு ஓட்டு போடலாம் என்று கூறி இருந்தார். அதன்படி அ.தி.மு.க., தி.மு.க.வில் ரஜினி ரசிகர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். பலர் மாவட்ட, நகர, கிளை கழகங்களில் நிர்வாகிகளாகவும் பொறுப்பில் இருந்து பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் அனைவரையும் ரஜினி மன்றத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இப்படி பல்வேறு கட்சிகளில் ரஜினி ரசிகர்களாக இருக்கும் தொண்டர்களை இழுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட ஒரு கட்சியில் இருக்கும் ரஜினி ரசிகர், அந்த கட்சி நிர்வாகிகளுடன் அரசியலில் இரண்டற கலந்து இருப்பார். அவரால் அதில் இருந்து மீண்டு வரமுடியுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்த மன்ற நிர்வாகிகள் ரஜினி என்று வரும்போது அவரது ரசிகர்கள் கட்சிகளையெல்லாம் மறந்து விடுவார்கள். ரஜினியை மட்டுமே நினைப்பார்கள் என்று கூறினர்.

    இதனால் தங்களது கட்சியில் உள்ள ரஜினி ரசிகர்கள் தெறித்து ஓடிவிடுவார்களோ என்கிற கலக்கம் அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் நிலவி வருகிறது. #tamilnews

    Next Story
    ×